தமிழ் மக்கள் இன்னமும் தனிநாட்டுக் கோரிக்கை என்ற உணர்வில் இருந்து விடுபடவில்லை. வடக்கு, கிழக்கில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் எல்லோரும் எதிராக நின்று பிரசாரம் செய்தால் கூட பிரிந்து செல்ல வேண்டும் என்றே தமிழ் மக்கள் வாக்களிப்பர். ஆனால் நாங்கள் எங்கள் மக்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சமரசமாக கூட்டாட்சியை வலியுறுத்துகிறோம்.
அரசியலமைப்புச் மாற்றம் தொடர்பான பொதுமக்களின் யோசனைகளை அறியும் குழுவின் முதல் நாள் அமர்வு நேற்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இதில் தனது கருத்துக்களை முன்வைக்கும் போதே வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
1997 இல் தமிழ் புத்திஜீவிகள் இணைந்து சட்ட நிறுவனம் ஊடாக தீர்வு யோசனை ஒன்றைத் தயாரித்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபாகரனுக்கும் அனுப்பி வைத்தனர். இந்தத் தீர்வுத் திட்ட யோசனைகள் கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
சுதந்திரத்தின் முன்னரான டொனமூர், சோல்பரி யாப்புகளிலும் குடியரசான பின் உருவாக்கப்பட்ட 1972, 1978 யாப்புகளிலும் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்களைக் கேட்க அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளமையையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
1970 இன் பின்னர் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டபோது தமிழ் கட்சிகள் வல்வெட்டித்துறையில் கூடி 9 அம்சக் கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கைக் கடிதம் தங்களுக்குக் கிடைத்தது என்ற பதிலே ஒரு மாதத்தின் பின்னரே கிடைத்தது.
இந்தச் சூழ்நிலையில் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சமஸ்டி அடிப்படையில் சமர்ப்பித்திருந்தன. அதை நான் இங்கும் சமர்ப்பித்துள்ளேன்.
அகிம்சை, ஆயுத வழிகளில் தமிழ் மக்கள் தனி நாட்டைக் கோரினர். இந்நிலையில் இப்போது தமிழ் சிங்கள மக்கள் தங்கள் இறைமைகளைப் பேணி கூட்டாட்சி கோரிக்கையை முன்வைத்துள்ளேன். இதையே சுவிஸ் போன்ற நாடுகள் சிறப்பாகப் பின்பற்றுகின்றன.
இலங்கையில் நடந்த போரில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. ஓரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், போராளிகளின் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
20 ஆயிரம் பேர் காணாமல் போயினர். இறுதிப் போரில் சரணடைந்த 8 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஏனவே போரில் பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வேண்டும்.
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு விட்டது எனக் கூறுகிறார்கள் நாமும் அதை ஏற்கிறோம். ஆனால் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டம் வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில் 1971 ஜே.வி.பி கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு 18 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி. கிளர்ச்சி மீண்டும் தோன்றியது.
இதைப்போல் தமிழ் மக்கள் இன்னமும் தனிநாட்டுக் கோரிக்கை என்ற உணர்வில் இருந்து விடுபடவில்லை. வடக்கு, கிழக்கில் சர்வதேச வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் எல்லோரும் எதிராக நின்று பிரசாரம் செய்தால் கூட பிரிந்து செல்ல வேண்டும் என்றே தமிழ் மக்கள் வாக்களிப்பர்.
ஆனால் நாங்கள் எங்கள் மக்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு சமரசமாக கூட்டாட்சியை வலியுறுத்துகிறோம். இந்தத் திட்டம் சரியாக செயற்படும்போது தனிநாட்டுக் கோரிக்கையில் இருந்து எங்கள் மக்கள் விடுபடுவர் என்று கருதுகிறேன். எனவே, எதிர்காலத்தில் அமையப் போகும் அரசமைப்புத்தான் இந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறது என்றார்.