சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரில் அதிபர் ஆசாத்தின் படைக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன.
பெரும்பாலும் அப்பாவிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உள்ள பகுதியிலேயே ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக துருக்கி உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அசாஸ் என்ற இடத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மற்றும் பள்ளி மீது ரஷ்யா விமான தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 14 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நகரின் தெற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாம் அருகேயும் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் எல்லை அருகே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதலுக்கு அந்நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஏராளமானோர் துருக்கிக்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து துருக்கி பிரதமர் அகமது டவுடோக்லு கூறியதாவது, ரஷ்யா ஒரு தீவிரவாத அமைப்பு போன்று செயல்பட்டு, தாக்குதல் நடத்தி பொதுமக்களை அவர்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறும் நிலையை ஏற்படுத்துகிறது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்தால் சரியான பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.