உந்துருளிகள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதுடன் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் கரவெட்டி யாக்கருச் சந்தியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குடவத்தை துன்னாலை தெற்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்தம்பி செல்வராஜா (வயது-29) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த இராசநாயகம் கோகுலன் (வயது-29), குடவத்தை துன்னாலை தெற்கைச் சேர்ந்த செல்லத்தம்பி செல்வரூபன் (வயது-18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த செல்வராஜா உந்துருளியின் பின்னால் செல்வரூபனை ஏற்றிக்கொண்டு முள்ளி வீதி வழியாக யாக்கருச் சந்திக்கு வந்ததாகவும் கோகுலன் என்பவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு கலிகைச் சந்தி வழியாக யாக்கருச் சந்திக்கு உந்துருளியில் வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவருகிறது.
இவ்வாறு வந்த இரண்டு உந்துருளிகளும் யாக்கருச் சந்தியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வராஜா செலுத்தி வந்த உந்துருளி வீதியின் ஓரமாகத் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அவரும் தூக்கி எறியப்பட்டார்.
இதன்போது தலையில் பலத்த அடிகாயத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய இளைஞர்கள் இருவரும் படுகாயங்களுக்குள்ளாகினர்.
வயலுக்கு உணவு எடுத்துச் செல்லப்பட்ட மற்றைய உந்துருளி விபத்துக்குள்ளாகி வீதியின் நடுவே காணப்பட்டதுடன் உணவுப் பார்சல்களும் விபத்து நடந்த இடத்தில் சிதறிக் காணப்பட்டன.
படுகாயமடைந்த இருவரும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.