இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் கடலில் விழுந்த ஏர்ஏசியா விமானத்தில் சென்றது அவர் எடுத்த செல்ஃபீ மூலம் அவரது அக்காவுக்கு தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தாவில் வசித்து வருபவர் யுனிதா சியாவல்(25). அவர் தனது தம்பி ஹென்ட்ரா குணவான் சியாவலுடன்(23) சேர்ந்து சுரபயா நகரில் லாஜிஸ்டிக்ஸ் தொழில் செய்து வந்தார்.
கடந்த 28ம் தேதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர்ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய செய்தியை அவர் சமூக வலைதளத்தில் பார்த்தார். அப்போது அவருக்கு அவரின் தம்பி அந்த விமானத்தில் சென்றது தெரியாது.
பின்னர் ஹென்ட்ராவின் நண்பர் புகைப்படம் ஒன்றை யுனிதாவுக்கு செல்போனில் அனுப்பினார். அது ஹென்ட்ரா தனது நண்பர்களுடன் ஏர்ஏசியா விமானத்தில் ஏறுகையில் எடுக்கப்பட்ட செல்ஃபீ ஆகும்.
அதை பார்த்த பிறகு தான் அவருக்கு தனது தம்பி அந்த விமானத்தில் சென்றது தெரிய வந்தது. இது குறித்து யுனிதா கூறுகையில், என் தம்பியும் நானும் போன் மூலம் தொடர்பில் இருந்தோம். அவர் எங்கு சென்றாலும் என்னிடம் கூறிவிட்டு தான் செல்வார்.
டிசம்பர் 27ம் தேதி இரவு போனில் பேசியபோது கூட அவர் சிங்கப்பூர் செல்வது பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார்.
விமானத்தில் செல்வதற்கு முந்தைய நாள் ஹென்ட்ரா முடியை வெட்டிவிட்டு தனது புதிய ஹேர்கட்டை புகைப்படம் எடுத்து அக்காவுக்கு போனில் அனுப்பி வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை ஜாவா கடலில் மீட்கப்பட்ட உடல்களில் ஒன்று ஹென்ட்ராவுடையது. ஹென்ட்ராவின் உடலை யுனிதா தான் அடையாளம் கண்டார்.