இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ்களால் வீதிகளில் ஏற்படும் விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை கண்டித்தும் இனிமேல் அவை நடைபெறக்கூடாது என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து இந்தப் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தொடர்ந்து ஊர்வலமாக யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் வரையில் சென்று, அங்கு தொடர்ந்து நடைபெற்றது. விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும், நியதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிய மகஜர், பொலிஸாரின் ஊடாக நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வடமாகாண போக்குவரத்துச் அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது. இலங்கை போக்குவரத்துச் சபையுடன் போட்டிபோட்டுக் கொண்டு ஓடிய தனியார் பஸ், திருநெல்வேலிச் சந்தியில் முச்சக்கரவண்டியை மோதியதில், அதில் பயணித்த சென்.பொஸ்கோ வித்தியாசாலையில் கல்வி கற்கும் பா.சுவஸ்திகன் (வயது 6) என்ற பாடசாலை மாணவர் கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என வலியுறுத்தும் வகையிலுமே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.