சியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11.45 மணிக்கு மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் போர் முனையில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 4 தமிழக வீரர்கள் உள்பட 10 பேர் சிக்கினர்.
அதில் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா மட்டும் பனிச்சரிவு ஏற்பட்டு 6 நாட்கள் கழித்து 25 அடி ஆழ பனியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து ஹனுமந்தப்பா தொடர்ந்து கோமாவில் இருந்தார்.
ஹனுமந்தப்பாவுக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவரது மூளைக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் இருந்தது தெரிய வந்தது. அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
அவரின் நுரையீரல்களில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் வேலை செய்யவில்லை. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும்போதிலும் அவரின் நிலைமை மோசமாகிக் கொண்டே இருந்தது.
ஹனுமந்தப்பாவின் நிலைமை இன்று காலை மேலும் மோசனமானது. இந்நிலையில் காலை 11.45 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சியாச்சினில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த வீரர் ஹனுமந்தப்பா கடவுள் பக்தி மிக்கவர், யோகா நிபுணர் ஆவார்.
ஹனுமந்தப்பா கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெடாதுர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் மகள் உள்ளார்.
ஹனுமாரின் நினைவாக அவருக்கு ஹனுமந்தப்பா என்று பெயர் வைத்ததாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். தனது மகன் குணமாகி வருவார் என்று எதிர்பார்த்த அவருக்கு ஹனுமந்தப்பாவின் மரணம் பேரதிர்ச்சியாக உள்ளது.
சியாச்சினில் ஹனுமந்தப்பா சிக்கியிருந்த இடத்தில் சிறு துவாரம் இருந்து அதன் வழியாக காற்று வந்ததால் தான் அவர் 6 நாட்களாக உயிருடன் இருந்துள்ளார்.
13 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய ஹனுமந்தப்பாவுக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் தினமும் யோகா செய்வாராம். மேலும் தன்னுடன் இருந்த வீரர்களுக்கும் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியும் கற்றுக் கொடுத்துள்ளார்.
ஹனுமந்தப்பாவின் மரணம் குறித்து தகவல் அறிந்த பெடாதூர் கிராமத்தினர் அவரின் வீட்டிற்கு முன்பு கூடியுள்ளனர். அவர் குணமடைந்து வருவார் என்று நம்பிய அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.