‘சாதிக்க வேண்டிய என்னை ஏன் சாகடித்து விட்டீர்கள்’ (இப்படிக்கு பா.சுவஸ்திகன்)
……………………..
கடந்த 3-ம் திகதி பலாலி வீதி தபால்பெட்டிச் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்திருந்த பொஸ்கோ பாடசாலை மாணவன் பா.சுவஸ்திகன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளான்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த தனியார் பயணிகள் பேருந்து வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை சடுதியாக மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த தரம் ஒன்று மாணவன் பா.சுவஸ்திகன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்திருந்த நிலையில் நேற்று முன்தினமிரவு உயிரிழந்துள்ளான்.
சிறுவனது இறுதிக்கிரியைகள் நேற்று மாலை நடைபெற்ற சமயத்தில் யாழ்.நகர் பகுதிகளில் சாரதிகளை வழிப்பூட்டும் வகையிலான துண்டுப் பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அவ் வழிப்பூட்டல் பிரசுரத்தை உயிரிழந்த மாணவனே தவிப்புடன் முன்னெடுப்பதாக வெளிப்படுத்தியிருந்ததனால் பிரசுரத்தை வாசித்த பலரது கண்களும் பனித்துப் போயிருந்ததை அவதானிக்க முடிந்தது.