இலங்கையில் இறுதிப்போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என மல்வத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐ நா மனித உரிமைகள் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் அவரைக் கண்டியில் சந்தித்தபோதே திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை அரசு சகல இன மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவற்காக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என மல்வத்தை பீடாதிபதி ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையரிடம் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் ஐ நா ஆணையரிடம் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனிடையே மனித உரிமைகள் விடயத்தில் உள்நாட்டு விசாரணை பொறிமுறையின் முக்கியத்துவம் பற்றி, ஐ.நா. ஆணையாளருக்கு தாம் விரிவான விளக்கம் கொடுத்துள்ளதாக அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பில் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியது, முக்கியமானதொன்றாக இருந்தது என ஊடகவியலாளர்களிடம் சயீத் ரா அத் அல் ஹுசைன் தெரிவித்தார்.
நாட்டில் சமாதானம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மற்றைய தரப்பினர்களுடனும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.