பொதுவேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் கூட்டமைப்பு மீண்டுமொரு வரலாற்றுத் தவறை விட்டுள்ளது – முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி

0
352
jeyananthamoorthyஇலங்கையின் ஐனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு தமிழ் மக்களுக்கு விரோதமானது. இதனால் கூட்டமைப்பு மீண்டுமொரு வரலாற்றுத்தவறை விட்டுள்ளது. இது கண்டிக்கப்பட வேண்டியதாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

” இலங்கையில் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வடகிழக்குத் தமிழ் மக்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன் தமிழ் பிரதேசங்களில் பாரியளவில் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. இது தமிழ் மக்களை பிழையான முறையில் வழிநடத்தும் செயல் என்பதுடன் கூட்டமைப்பினர் தமது சுயலநத்திற்காக மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் ஐனநாயகத் திணிப்பாகவுமே கருதவேண்டியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐனாதிபதித் தேர்தலின்போதும் எதிரணி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து தமிழ் மக்களை பிழையான பாதையில் வழிநடத்தியிருந்தனர். எனினும் அத்தேர்தலில் மீண்டும் ஐனாதிபதியாக மகிந்த ராஐபக்சவே வெற்றியீட்டியிருந்தார். இதனால் தமிழ் மக்களுக்கு மகிந்த ராஐபக்சவின் தலைமையிலான அரசிடமிருந்து எந்தவொரு விமோசனத்தையோ நன்மைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களையே சந்திக்க வேண்டிய நிலை தோன்றியது.
இந்த அனுபவத்தையும் அதனால் ஏற்பட்ட வடுக்களையும் மறந்து ஆட்சி மாற்றம் வேண்டுமென்றும் அதனாலேயே எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வெற்றியீட்ட வைக்க வேண்டுமென்றும் கூட்டமைப்பு மீண்டும் கங்கணம் கட்டி நிற்கின்றது.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் கௌரவமான வாழ்க்கை, அவர்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள், தேவைகள் என்பதற்கு அப்பால் தமது சுயநலத்திற்காகவும் பிராந்திய மற்றும் வல்லரசுகளின் தேவைகளுக்காகவுமே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. ஏனெனில் தற்செயலாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் நன்மையடையப்போவது இந்நாடுகளே தவிர எமது தமிழ் மக்கள் அல்ல. இந்த அணியில் தமிழ் மக்களுக்கு எதிரான கட்சிகளே கூட்டுச்சேர்ந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கு நிம்மதியான எந்தவோரு தீர்வையும் கூட்டமைப்பினால் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையே தோன்றும்.

எனவே இன்றைய அரசியல் சூழ்நிலை, சர்வதேச போக்குகள், பிராந்திய நாடுகளின் நிலைப்பாடுகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு கட்டத்திலும் தீர்க்கமான முடிவுகளையோ எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையுடைய நல்வழிகளையோ மேற்கொண்டு மக்களை வழிநடத்தியதாக சரித்திரமில்லை.

சில அன்னிய சக்திகளின் பின்னணியில் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அவ்வாறான ஒரு செயற்பாடே தற்போது ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக எடுத்துள்ள முடிவையும் கருத வேண்டியுள்ளது.

எனவே எமது மக்கள் தமது ஐனாநாயக உரிமையை விட்டுக் கொடுக்காது எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையைப் புறந்தள்ளி அவர்களின் கபடநாடகத்தை உணர்ந்து கொண்டு அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இதுவே எமது மக்களின் வரலாற்றுக் கடமையாகும்.
நான் தமிழ் மக்களில் அளவற்ற பற்றுக் கொண்டவன் என்ற வகையிலும் எனது மாவட்ட மக்கள் மீது அக்கறை உள்ளவன் என்ற நிலையிலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை நன்கு உணர்ந்த நிலையில் எனது மக்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்த வேண்டியது எனது கடமையாகும். எனவே எமது மக்கள் இவற்றைக் கவனத்தில் கொண்டு சிந்தித்துச் செயற்பட வேண்டும். என ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here