விண்கல் தாக்கி தமிழகம் வேலூரில் ஒருவர் பலி!

0
165

nocreditவேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி வட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் அது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், அக்கல்லூரியின் பேருந்து ஓட்டுநரான காமராஜ் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் விண்கல் தாக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

உயிரிழந்த அந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு அளிக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பலியான காமராஜின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்துக்கு தமது அனுதாபத்தையும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அசாதாரணமான வகையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் காயமடைந்த மற்ற மூவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அந்த குறிப்பிட்ட தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில், மர்மப் பொருள் ஒன்று வானிலிருந்து விழுந்தது என்றும், அது அதிகமான சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும், அதன் காணரமாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததாகவும், பிபிசி தமிழோசையிடம் பேசிய அக்கல்லூரியில் பணிப்புரிந்து வரும் அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த விபத்தில் தான் பேருந்து ஓட்டுனர் காமராஜ் உள்ளிட்டோர் காயமடைந்து, அவசரமாக மருத்துவமைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் வழியிலேயே பலத்த காயமடைந்திருந்த ஓட்டுனர் காமராஜின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த வாரம் செவ்வாய்கிழமை, ஜனவரி 26 ஆம் தேதியன்று, இதே போன்றொதொரு சம்பவம் அதே வேலூர் மாவட்டத்தின் ஆலங்காயம் பேரூராட்சி அருகே நடைபெற்றதாகவும், அச்சம்பவத்தினால், நெற்பயிர் வயல் ஒன்றில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உருவாகியிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அகமதாபாத் இயற்பியல் ஆய்வு கூடத்தின், வான் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here