இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல் சைன் நேற்று சனிக்கிழமை காலை 8.25 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகா ரிகள் மற்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கிய இனச் சிறுவர்கள் பூங்கொத்துக்களை கொடுத்து வரவேற்றனர்.
இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தங்கியிருக்கவுள்ள இவர் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் சிறிலங்கா தொடர்பில் தான் முன்வைத்த பரிந்துரைகள் ஆகியவை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து இவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தேசிய மனித உரிமை ஆணைக்குழு மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு நாளையும், நாளை மறுதினமும் பயணம் செய்யவுள்ள இவர், வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர்கள் மற்றும் முதலமைச்சர்களையும் சந்தித்து பேசவுள்ளார்.
வடக்குக் கிழக்கிலுள்ள சிவில் சமூகத்தினர், மனிதவுரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களையும் சந்திக்கவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல் {ஹசேன், கண்டி தலதா மாளிகைக்கு சென்று மகாநாயக்க தேரர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.