நாளைய தினம் யாழிற்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹூஸைனிடம் வடக்கில் காணாமல் போனோரது உறவுகள் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளனர்.
வடமாகாணத்தில் படையினரால் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை குறித்து வெளிப்படுத்த வலியுறுத்தியே இந்த மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் காணாமல் போனோரது உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் மேலும் தெரிவிக்கையில்,
நாளை யாழிற்கு வருகை தரவுள்ள ஐ.நா ஆணையாளரை காணாமல்போனவர்களின் உறவினர்கள் சந்திப்பதற்கான பிரத்தியேக ஒழுங்குகள் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஆணையாளரை சந்திப்பதற்கு அனுமதியை பெற்றுக் கொடுக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டிருக்கின்றோம். அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் முதலமைச்சர் ஊடாக சந்திப்போம் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் நல்லூர் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் சென்று அங்கு வைத்து மகஜர் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயம் முன்பாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடி அமைதியான முறையில் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், எமது மகஜரை கையளிக்க அரசியல் கட்சிகள் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆகியோரது பூரண ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.