இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிறிலங்கா சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் –
மைத்திரிபால சிறிசேனவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 9 ஆவது அமர்வில் இணைத் தலைமை வகித்து கலந்துகொள்வதற்காகவே சுஷ்மா சுவராஜ் நேற்று சிறிலங்கா வருகை தந்தார்.
இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் மற்றுமொரு இணைத் தலைவரான வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.
இம்முறை அமர்வில் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுலா மற்றும் பாதுகாப்பு துறைகளின் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த அமர்வில் இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்பட்டன.
வடக்கிலுள்ள 27 பாடசாலைகளை நவீனமயப்படுத்துதல், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சத்திரசிகிச்சை பிரிவு மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கும் இந்த அமர்வில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இறுதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், பிற்பகல் இரண்டு மணியளவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பவுள்ளார்.