இலங்கையின் 68வது சுதந்திர தினமாகிய இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாணத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட தமிழ் மக்கள் கறுப்புப் பட்டி அணிந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தினர்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
”உரிமைகள் மறுக்கப்படும் போது சுதந்திரத்தை எவ்வாறு உணர முடியும்? ” என்ற தொனிப்பொருளில் திருகோணமலை நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலான வாசக அட்டைகளையும் ஏந்தியவாறு காணப்பட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் போனவர்களை கண்டு பிடித்தல் போன்ற விடயங்களுடன் தமது வாழ்விட உரிமை, நிலவுரிமை, தொழில் உரிமை ஆகியவற்றை வலியுறுத்துவதே இந்த போராட்டத்தின் நோக்கம் என ஏற்பாட்டாளர்களான திருகோணமலை தமிழ் சிவில் அமைப்புகளின் ஓன்றியம் கூறுகின்றது.
சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட பகுதியியிலிருந்து கடற்படையை வெளியேறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களினால் மீள் குடியேற்றம் முழுமையடையவில்லை என்ற தமது விசனத்தையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
அனல் மின் நிலையங்கள் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தல்களாக அமையும் என்பதால் இந்தியா மற்றும் ஜப்பான் உதவியுடன் சம்பூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின்நிலைய திட்டங்கள் கைவிடப்படவேண்டும் என்றும் திருகோணமலை தமிழ் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.
கங்குவேலி மற்றும் தென்னைமரவாடி ஆகிய இடங்களில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் சிங்களவர்கள் தொடர்ந்தும் அத்து மீறி நெல் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுதல், கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை மறுப்பு, அரசியல் பின் புலத்தில் வெளி மாவட்ட மீனவர்களின் வருகை அதிகரிப்பு போன்ற விடயங்களையும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.