இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வடக்கில் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட அதேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணாமல்போனோரின் உறவினர்கள் அந்த நாளை துக்க தினமாக அனுட்டித்திருக்கின்றனர்.
வாயில் கறுப்புத் துணியைக் கட்டி, கறுப்புக் கொடிகளை ஏந்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதிருப்பதைக் கண்டித்தும், சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் வேலங்குளம் பிரதேச மக்கள் குடியிருப்புகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததைக் கண்டித்து வவுனியா-மன்னார் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் இந்தப் பகுதியில் 4 மணிநேரத்துக்கு மேலாக பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
வவுனியா – மன்னார் வீதியில் பூவரசங்குளம் பகுதியில் இருந்து இரணை இலுப்பைக்குளம் செல்லும் வீதியில் யுத்த காலத்தில்கூட அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், யுத்தம் முடிந்த பின்னர் அங்கு போதிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுட்டிக்காட்டினர்.
போக்குவரத்து வசதியின்மை காரணமாக பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதுடன், வைத்தியசாலைக்கு நோயாளிகள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
மீள்குடியேறி பல ஆண்டுகளான போதிலும் நிரந்தர வீட்டு வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் தாங்கள் மழைக் காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாகவும் தமக்குரிய வீடுகளை வழங்கி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்கள், வவுனியா அரச அதிபர் ரோகண புஸ்பகுமார, பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்று சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவற்றை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கின்றனர்.