செலிங்கோ கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி, சிசில் கொத்தலாவல கட்டுநாயக்க விமானநிலையத்தில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கோல்டன் கீ நிறுவனத்தில் ஏற்பட்ட சரிவின் பின்னர், அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை மீளக் கோரிய சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2008 டிசம்பர் மாதம், அவர் இலங்கையிலிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை கைது செய்வதற்காக, இன்டர் போல் பொலிஸாரிடம் பிடியாணை வழங்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்திலிருந்து துபாய் வழியாக இலங்கை வந்த வேளையிலேயே அவரை கைது செய்ததாக குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சிசில் கொத்தலாவலவை குற்றப் புலனாய்வு பிரிவினர், இரகசிய பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில், தான் சுகவீனமுற்றிருப்பதால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அம்புலன்ஸ் வண்டியின் மூலம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது அவர், இரகசிய பொலிஸாரின் கண்காணிப்பில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.