பெப்ரவரி 4: வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசம் முழுவதும் உயரப்பறக்கட்டும் கறுப்புக்கொடிகள்!

0
213

black dayதமிழ்மொழி பேசும் மக்கள், தமது பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்தில் ‘சமஸ்டி’ அதிகாரத்துடன் எப்போதும் வாழத்தகுதியுடைய தனித்துவமான ஒரு தேசிய இனம், பெரும் வலிகள் – இழப்புகளுக்கு பின்னரும்கூட அத்தகையதொரு சுயாட்சி அதிகார அலகுக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற தனித்துவமான ஒரு தேசிய இனம் என்ற விடுதலை உணர்வு உந்துதலோடு,

ஒவ்வொரு பிரஜையையும் சிறீலங்கா அரசாங்கத்தின் மனிதகுலப்படுகொலைகளை, தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் மீறல்களை, வன்முறைகளை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச சமுகத்துக்கு பகிரங்கப்படுத்தும் அடையாளமாக, பெப்ரவரி 4 அன்று தத்தமது இல்லங்கள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் தோறும் கறுப்புக்கொடிகளை உயரப்பறக்கவிடுமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

பெப்ரவரி 4: சிறீலங்காவின் 68வது சுதந்திரநாளை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிப்போம் என்று ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்கள் விடுத்துள்ள அறிவிப்புக்கு தமது முழுமையான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வழங்குவதாக தெரிவித்து ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்’ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த ஊடக அறிக்கையின் முழுவிவரமும் வருமாறு:

ஊடக அறிக்கை:
31.01.2016

‘சமஸ்டி’ அதிகாரத்துடன் தனித்துவமாக வாழத்தகுதியுடையது தமிழ் தேசியக்குடியினம் !!! பெப்ரவரி 4: வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசம் முழுவதும் உயரப்பறக்கட்டும் கறுப்புக்கொடிகள் !!!

தமிழ்மொழி பேசும் மக்கள், தாங்கள் பிறந்து வாழ்ந்து வளப்படுத்திய நிலத்தின் பாதுகாப்புக்கும், அந்த நிலத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான சீவனோபாய செயல்பாடுகளுக்கும், நீண்டகால தனிமனித விருத்திக்கும் – பாதுகாப்புக்கும் உத்தரவாதமற்ற – அச்சுறுத்தலான சூழலில் தான்,

இலங்கைத்தீவில் அதிலும், தமது பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்தில் தற்காலத்திலும்கூட சீவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

சமஸ்டி ஆட்சிக்கு தகுதியுடைய ஒரு தேசிய இனத்தினர், தமக்கென்று பொதுவான இராணுவ பாதுகாப்பு இல்லாத சூழலில், எந்தவேளையிலும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் ‘கடித்துக்குதறப்பட்டு விடுவோம். வேட்டையாடப்பட்டு விடுவோம்’ என்ற பீதியுடன் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

சிறீலங்கா அரசாங்கத்தின் மாபெரும் இனப்படுகொலைக்குள் அகப்பட்டு, எஞ்சிப்பிழைத்திருக்கும் தமிழ் தேசியக்குடியினம், தமது பாரம்பரிய பண்பாட்டு நிலத்தில், தமக்கேயுரிய மொழி கலை கலாசார மரபுரிமைகளை நிலைநிறுத்த முடியாமல் நித்தமும் உழன்றுகொண்டிருப்பவர்கள்.

கல்வி, கலை, கலாசாரம், தொழில், உணவு உற்பத்தி, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம், பழக்க வழக்கங்கள் என்று குடும்ப அலகு முதல் சமுக கட்டமைப்பு வரையாக சிதிலமாக்கப்பட்டுள்ள தமது வாழ்வியல் முறைமைகளை மறுபடியும் தகவமைத்துக்கொள்ள சமகாலத்திலும் கடுமையாக போராடிக்கொண்டிருப்பவர்கள்.

தமது பாரம்பரிய பண்பாட்டு நிலத்தில், ‘ உயிர் வாழ்தல்’ என்பதே அவர்களுக்கு எப்போதும் போலவே மிகப்பெரிய போராட்டமாகவே இருக்கிறது.

 சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பு படைகளால் தமக்குரிய பூர்வீக நிலபுலங்களிலிருந்து துரத்தப்பட்டவர்கள், தற்காலத்திலும்கூட தங்களுக்கு உரித்துடைய அந்த வாழ்விடங்களுக்கு திரும்ப முடியாமல் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

 இலங்கையில் குடியியல் சமுகங்களுக்கு மோசமான பாதிப்புகளையும், ஆபத்துகளையும் உண்டுபண்ணியுள்ள சிறீலங்கா அரசின் ஆள்கடத்தல் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்கள் தொடர்பில் ‘பொறுப்புக்கூறல் – பரிகாரநீதி’ வழங்கல் செயல்பாட்டு முன்னெடுப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 ‘கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள்’ தொடர்பில் நியாயம் கோரும் குடும்பங்களுக்கும், ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படவில்லை.

 இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பற்றிய பிரஜைகளின் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

 சர்வதேச போர் நியமங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும் மீறி சிறீலங்கா அரசானது நடத்தி முடித்துள்ள போரில், தான் நிகழ்த்தியுள்ள மனிதகுலப்படுகொலைகளுக்கும், மீறல்களுக்கும் உரிமை கோரவில்லை.

சிறீலங்கா அரசு பெரும் சத்தமாக தான் நடத்திய கொடும் தமிழ் இன அழிப்புப்போரை பகிரங்கமாக நிறுத்தியுள்ளபோதிலும்கூட, ‘தமிழ்மொழி பேசும் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு கிராமங்களுக்கு சிங்கள மொழிப்பெயர்களை சூட்டுதல், அந்த மக்களின் மதவழிபாட்டுத்தலங்களை அழித்து புத்தமதவழிபாட்டு தூபிகளையம் விகாரைகளையும் தோற்றுவித்து அவர்களின் வாழ்விடங்களை பௌத்த மயமாக்குதல், தொடர்ந்தும் தமது இராணுவ வல்வளைப்புச்சூழமைவுகளுக்குள் அந்த மக்களை வாழ நிர்ப்பந்தித்தல்’ என்று, முன்கொண்டுசெல்லும் நன்கு கட்டமைக்கப்பட்ட ‘உள்குத்து அன்றி ஊமைக்காய’ தமிழ் இன அழிப்பு – இனக்கலப்பு நடவடிக்கைகளை ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ வன்மையாக கண்டிப்பதோடு,

மிகவும் நூதனமாக – சூசகமாக முன்னெடுக்கப்படும் சிறீலங்கா அரசின் ஆழஊடுருவி மூலங்களை சிதைக்கும், இன அழிப்பு நடவடிக்கைப்போக்கை விழிப்புநிலையுடன் எதிர்கொள்ளுமாறும் தமிழ் சமுகத்தை ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ எச்சரிக்கின்றது.

இத்தகைய அபாய சூழலில், பெப்ரவரி 4: சிறீலங்காவின் 68வது சுதந்திரநாளை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்கும், ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்களின் முடிவுக்கு, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ தனது முழுமையான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை வழங்குகின்றது.

தமிழ்மொழி பேசும் மக்கள், தமது பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு தாயகப்பிரதேசத்தில் ‘சமஸ்டி’ அதிகாரத்துடன் எப்போதும் வாழத்தகுதியுடைய தனித்துவமான ஒரு தேசிய இனம், பெரும் வலிகள் – இழப்புகளுக்கு பின்னரும்கூட அத்தகையதொரு சுயாட்சி அதிகார அலகுக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற தனித்துவமான ஒரு தேசிய இனம் என்ற விடுதலை உணர்வு உந்துதலோடு,

ஒவ்வொரு பிரஜையும் சிறீலங்கா அரசாங்கத்தின் மனிதகுலப்படுகொலைகளை, தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் மீறல்களை, வன்முறைகளை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச சமுகத்துக்கு பகிரங்கப்படுத்தும் அடையாளமாக, பெப்ரவரி 4 அன்று தத்தமது இல்லங்கள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் தோறும் கறுப்புக்கொடிகளை உயரப்பறக்கவிடும் அதேவேளை,

வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும், நகரின் முக்கியப்பகுதிகளில் கறுப்பு பட்டியணிந்து காலையிலிருந்து மாலைவரை நடத்தப்படும் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களிலும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here