இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவிற்கு வடக்கே அனலைதீவு கடற்பரப்பில் நேற்று (30) நள்ளிரவு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அனலைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீவர்களை இன்று (31) முற்பகல் கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் பாலசுப்ரமணியம் ரமேஷ்கண்ணா குறிப்பிட்டார்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலசுப்ரமணியம் ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.