வங்கதேசத்தின் எதிர்க்கட்சித் தலைவியும் முன்னாள் பிரதமருமான காலிதா ஸியாவை, அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் அவரது கட்சி அலுவலகங்களுக்குள் முடக்கி வைத்துள்ளன.
தலைநகர் டாக்காவில் மறு அறிவித்தல் வருகின்றவரை அனைத்து அரசியல் பிரசாரப் பேரணிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
காலிதா ஸியா, அவரது அலுவலகக் கட்டடத்தை விட்டு வெளியேற முடியாதவாறு நேற்று சனிக்கிழமை மாலை முதல் தடுக்கப்பட்டுள்ளார்.
காலிதா ஸியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சியான பிஎன்பீ, வரும் திங்கட்கிழமை பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தது.
வாக்கு மோசடிகள் நடக்கும் என்ற காரணத்தைக் காட்டி தேர்தல் ஒன்றை அக்கட்சி புறக்கணித்து ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டே இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிஎன்பீ-யின் அலுவலகங்களுக்கு அருகே காவல்துறை வாகனங்கள் வீதியை மறித்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் பெருமளவு பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டுள்ளனர்.