முல்லைத்தீவு – அளம்பில் தெற்கு யாழ் வீதியில் உள்ள வீடு ஒன்று நேற்று இரவு முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
அளம்பில் சந்தி பகுதியில் தையல் நிலையம் ஒன்றினை நடாத்திவரும், யாழ் வீதி அளம்பில் தெற்கை சேர்ந்த கண்ணையா வியஜராசா என்பவருடைய வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நிரந்தர வீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருவதன் காரணமாக இவர்கள் தற்காலிகமாக வசித்து வந்த வீடே முற்றாக எரிந்துள்ளதுடன், தீயை அணைக்க அயலவர்களும் வீட்டாரும் முயற்சித்த போதிலும் அது பலனளிக்காது போகவே வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வீட்டில் இருந்த ஒரு இலட்சம் ரூபா பணம், 10 தங்கப் பவுணுக்கு மேற்பட்ட நகைகள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.