முல்லைத்தீவு மாவட்ட கேப்பாப்புலவு மக்கள் தம்மை சொந்த இடத்தில் குடியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம் பெற்ற, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக இன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டம் முடிவடைந்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் வந்தபோது அவர்களை சந்தித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இவர்கள் கையளித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“எமது கேப்பாப்புலவு கிராமம் நெற்செய்கை, சேனைப்பயிர்ச்செய்கை, கால்நடைவளர்ப்பு, மற்றும் மீன்பிடித்தொழில் என்பவற்றை செய்து பூர்வீகமாக வாழ்ந்த நிலப்பரப்பு ஆகும்.
இன்று எமது கிராமம் விடுவிக்கப்படாமல் மக்கள் கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் றூட்காணியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் மக்கள் தொழில்களை இழந்து வறுமை காரணமாக சமூகவிரோத செயல்கள் தலைதூக்கி உள்ளன. ஏனைய இடங்கள் தங்களது நல்லாட்சியில் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எமது கிராமம் விடுவிக்கப்படாமை எமக்கு மிகவும் மனவேதனையை தருகிறது.
எமது கிராமத்திற்கு எதுவுமே மாற்றீடாக முடியாது அத்தோடு எமக்குரிய மீள்குடியேற்ற பணமும் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே ஏனைய மக்கள்போல் நாமும் எமது சொந்தக் கிராமமாகிய கேப்பாபுலவுக்கு மீள்குடியேற தங்களது நல்லாட்சியின் கீழ் உதவுமாறு தங்களை தயவுடன் வேண்டுகிறோம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.