சட்டவிரோதமான முறையில், படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சுமார் 1,200 அகதிகள், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அதில் அதிகமானோர் இலங்கை அகதிகள் எனவும் இனங்காணப்பட்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கணிக்கப்பட்ட எண்ணிக்கையில் அதிகமான இலங்கை அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று, தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் சீன் கெல்லி, வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேயாவிலுள்ள கடல் பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடினமான எல்லைக் கட்டுப்பாடுகளை மீறி, விசா இல்லாமல் படகு மூலம் நாட்டுக்குள் வந்த எவராலும் அங்கு குடியமர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதையும் மீறி, மிகவும் தூர இடங்களிலிருந்து வந்து எல்லையைத் தாண்டுபவர்கள், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அல்லது வேறொரு நாட்டுக்கு பிராந்திய வழிவகைகளை செய்துகொள்வதற்காக அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவுக்கு வந்து குடியமர்வது என்பது, எந்தவொரு காலத்திலும் சரியானதொரு முடிவாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.