அமெரிக்காவில் பெரும் பனிப்புயல்: 9 பேர் பலி!

0
378

americaஅமெரிக்காவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரியது என்று கருதப்படும் பனிப்புயல் ஒன்று அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியைத் தாக்கியதில், பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

டென்னஸி, கெண்டகி, வர்ஜீனியா, மேரிலாந்து உள்ளிட்ட 10 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான இந்தப் பனிப் புயல் சார்ந்த வானிலை காரணமாக இதுவரை குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வட கரோலைனாவில் இறந்துள்ளதாகவும், அங்குள்ள சாலைகள் ஆலங்கட்டி மழை மற்றும் கருப்பு பனியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அம்மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி சியில் புயல் தாக்கத் தொடங்கி முதல் சில மணி நேரங்களிலேயே இருபது செண்டிமீட்டர் அளவுக்கு பனி பெய்துள்ளது. மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு நேற்றே அதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து, அங்கு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஏழாயிரத்துக்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் மற்றும் வீதிப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று தொடங்கிய பனிப்புயல் இன்று வரை கடுமையாக தொடர்வதாக கூறுகிறார், வெர்ஜீனியா மாகாணம் ஆர்லிங்டன் பகுதியில் வாழும் தமிழரான சுரேஷ் குமார்.

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், அவசர மருத்துவ வசதிகளை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தாலும், மருத்துவமனைக்கு சென்று சேருவதே மிக பெரிய சவாலாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பனிப்புயல் நாளை, ஞாயிறன்று காலைவரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here