இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.
‘உள்நாட்டு பொறிமுறை மூலமாகத் தான் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்று மிகவும் தெளிவாக நான் கூறியிருக்கிறேன். அவ்வாறே எமது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் அது அமையவேண்டும். அதேபோல, வெளிநாடுகளிலிருந்து நீதிபதிகளைக் கொண்டுவரவும் எதிர்பார்க்கவில்லை.அதற்கு நான் இணங்கவும் மாட்டேன்’ என்றார் மைத்திரிபால சிறிசேன.
இலங்கையின் நீதித்துறையின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் உள்ளூர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வேறு நாடுகளிலிருந்து யாரையும் ‘இறக்குமதி’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் அரசியலமைப்பு, மனித உரிமைகள், சட்டங்கள் என்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக உள்ள இலங்கையர்களை இலங்கையின் உள்ளக விசாரணைக்காக வரவழைக்க முடியும் என்று கூறிய ஜனாதிபதி, சர்வதேச தலையீட்டுக்கு ஒருபோதும் தான் இணங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
‘விசாரணையின் கால அளவு தெரியாது’
‘இந்த வேலைக்கு சர்வதேச தலையீடு எமக்குத் தேவைப்படாது.எங்களின் பிரச்சனையை எங்களால் தீர்த்துக்கொள்ளமுடியும். எல்லாத் துறைகளிலும் வல்லுநர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். பௌதீக வளங்கள், தொழில்நுட்பங்கள் போன்ற வழிகளில் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தான் சர்வதேசத்தின் உதவிதேவை, தவிர அரசியலுக்கோ, அரச நிர்வாகத்துக்கோ எங்களுக்கு சர்வதேச உதவி தேவை இல்லை’ என்றும் கூறினார் சிறிசேன.
ஐநாவின் முன்னெடுப்பில் உலகின் வேறுநாடுகளில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது போல, இலங்கையின் உள்ளக விசாரணை குறித்த கால அளவுகளை தங்களால் மதிப்பிட்டுக் கூறமுடியாது என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சொல்லப்படும் இராணுவ வீரர்களின் பெயர்களை ஐநாவின் மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுக் கூறவில்லை என்றும் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதும் குற்றச்சாட்டுக்களை பொதுவாகக் கூறுவதை ஏற்கமுடியாது என்றும் கூறிய மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணையில் குற்றம் உறுதிசெய்யப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்று பிபிசி கேட்டது.
‘விசாரணையின் பின்னர், அவ்வாறான குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டால் அதுபற்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பில் இலங்கையின் இணை-அனுசரணையில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றை நிறுவுமாறும் அதற்கு காமன்வெல்த் உள்ளிட்ட வெளிநாடுகளின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘தடுத்துவைப்பு-சித்திரவதைகள் எதுவும் நடப்பதில்லை’
இதனிடையே, ஆட்களை தடுத்துவைத்து சித்திரவதை செய்யும் குற்றச்சம்பவங்கள் இலங்கையில் இன்னும் தொடர்வதாக அண்மைக்காலங்களில் வெளியான குற்றச்சாட்டுக்களையும் இலங்கை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானவர்கள் தான் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் நாட்டில் இப்போது அப்படி ஒன்றும் நடப்பதில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையில் வெள்ளை வேன்களில் ஆட்கள் கடத்தப்படுவது இப்போதும் தொடர்வதாக அண்மையில் வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதி மறுத்துப் பேசினார்.
‘காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுகின்றன’
வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்கப்படுவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
‘வடக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தான் இவை. அவற்றை அவர்களுக்கு கொடுத்தாக வேண்டும். இராணுவ முகாம்களுக்கு இடையூறு ஏற்படாத விதத்தில் இந்தக் காணிகளை அந்த மக்களுக்கு திருப்பிக்கொடுத்தாக வேண்டும்’ என்றும் கூறினார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.