இராயப்பு யோசப் ஆண்டகை குறித்தோ மற்றும் ஆயர் இல்லத்தில் நிகழும் எந்த நிகழ்வாகினும் ஆயர் செயலகத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயற்பட்டு எந்தக் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளியிட வேண்டாம் என கேட்டு நிற்கின்றோம்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகையின் 23 ஆண்டு கால தியாகம் நிறைந்த, இக்கட்டான காலத்தில் கூட ஓங்கி ஒலித்த அவரது உண்மைக்கான நீதிக்கான குரலும் அவருடைய மனித நேயப் பணிகளும் இலங்கையில் மட்டுமல்ல மாறாக உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு, பாராட்டப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் செயலகம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாறாக பல அரும்பணிகள் செய்த ஆயருக்கு ஏற்பட்ட நோய் எம் எல்லோரையும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
ஆயர் செய்த பணிகளும் அவருடைய உண்மைக்கான குரலும் தொடர வேண்டும் என்பதே எல்லோருடைய செபமாகும்.
அவர் தற்பொழுது பல சிகிச்சைகளுக்குப் பின்பதாக ஒரளவு உடல் நலம் தேறி ஆயர் இல்லத்தில் ஓய்வு பெற்று வருகின்ற வேளையில் அவரை பார்வையிட பல பிரமுகர்கள், அவரால் உருவாக்கப்பட்டவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பங்கு மக்கள் என்றும் பலர் ஆயரை பார்வையிட்டும், மற்றும் மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அப்போஸ்தலிக்க பரிபாலகரான அதிவந்தனைக்குரிய கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களை சந்தித்தும் ஆசீர் பெற்றும் செல்கின்றார்கள்.
ஆயர் இல்லம் வரும் அனைவரையும் என்றும் நாங்கள் அன்புடன் வரவேற்கின்றோம். ஆனால் கடந்த சில காலங்களாக அதிவந்தனைக்குரிய இராயப்பு யோசப் ஆண்டகையின் உடல் நிலை குறித்தும் மற்றும் மறைமாவட்டம் குறித்தும் வெளிவருகின்ற தவறான மற்றம் திரிவு படுத்தப்பட்ட கருத்துக்கள் எங்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
எனவே எதிர்வரும் காலங்களில் ஆயரை சந்திக்க வரும் பிரமுகர்களோ, அரசியல்வாதிகளோ அல்லது அவர்களுடன் வருகை தரும் பத்திரிகையாளர்களோ இங்கு பேசப்படும் விடயங்களை மிகைப்படுத்தியோ அல்லது அவற்றை உங்களுக்கு சாதகமாகவோ மாற்றி திரித்துக் கூறி மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகின்றோம்.
அத்துடன் இனிவரும் காலங்களில் ஆயர் குறித்தோ மற்றும் ஆயர் இல்லத்தில் நிகழும் எந்த நிகழ்வாகினும் ஆயர் செயலகத்தின்; அனுமதி இன்றி தன்னிச்சையாக செயற்பட்டு எந்தக் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளியிட வேண்டாம் என கேட்டு நிற்கின்றோம்.
மேலும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் செயலகம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.