கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உண்மைநிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.
மேலும் தமது சங்கத்துடன் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சகல குடும்பங்களையும் ‘மாவட்டந்தோறும் சமநேரத்தில்’ முற்றுகைப்போராட்டத்தை முன்னெடுக்குமாறும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளின் விடுதலை தொடர்பில் கரிசனை கொண்டுள்ள அனைத்து சிவில் சமுக அமைப்புகளையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் இந்த முற்றுகைப்போராட்டத்தில் தம்முடன் இணைந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முற்றுகைப்போராட்டம் தொடர்பில் அவர் மேலும் அறியத்தருகையில்,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆட்கடத்தல் சம்பவங்களினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றோம். இந்த குடும்பங்களில், இராணுவ மற்றும் பொலிஸ் உடைகளுடன் வீடுகளுக்குள் புகுந்து பிள்ளைகளை இழுத்துச்சென்று வாகனங்களில் ஏற்றிச்சென்றதையும், முள்ளிவாய்க்காலில் கணவர்களை, பிள்ளைகளை இராணுவத்தினரிடம் நேரடியாக ஒப்படைத்த ஆயிரக்கணக்கானோர் கண்கண்ட சாட்சிகளாகவும் உள்ளோம்.
2009க்குப்பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது, ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்போம். சிறைச்சாலைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளை விடுவித்து தருவோம்’ என்று கூறியே, தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் எங்களிடம் வாக்குகேட்டு வந்தனர்.
ஆனால் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர், எமது பிள்ளைகளின் விடுதலை தொடர்பில் எவ்வித சிரத்தையும் இன்றி, அரச சலுகைகளை அநுபவித்துக்கொண்டும், அரச உயர் பதவிகளை அலங்கரித்துக்கொண்டும், அரசாங்கத்தின் ஏற்புடையற்ற போக்குகளை நியாயப்படுத்திக்கொண்டும், அரசாங்கத்துக்கு நோகாமல் – வலிக்காமல் அறிக்கை அரசியல் செய்து காலத்தை களித்து வருகின்றனர்.
எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்காக நீதி கோரி வீதியில் இறங்கிப்போராடாமல் – கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்காமல், எமது போராட்டங்களின் நியாயப்பாடுகளை நீர்த்துப்போகச்செய்து,
‘காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களே இலங்கையில் நடைபெறவில்லை’ என்றவாறான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அரசாங்கத்தை பாதுகாக்கும் மென்போக்கு அரசியல் செயல்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வரும் பல சம்பவங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது. உரிமை அரசியலை விடுத்து சலுகை அரசியலை நோக்கி எமது இனத்தை நகர்த்தும் கேடு கெட்ட அரசியலையும் இவர்கள் செய்வதை உணர முடிகின்றது.
இம்மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச பொங்கல் விழாவில், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் தனக்கு அருகே அமர வைத்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம்’ என்று அசாதாரணமாக கூறியுள்ளார்.
அப்படியென்றால், ‘எமது பிள்ளைகள் இதுவரை காலமும் எந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்? அவர்களை தடுத்து வைத்திருந்தவர்கள் யார்? அவர்களை சுட்டுக்கொன்றவர்கள் யார்? கொன்றவர்களுக்கு என்ன தண்டனை? பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு என்ன நீதி நியாயம்?’ என்றெல்லாம் எவ்விதமான எதிர்க்கேள்வியும் ரணிலிடம் கேட்காமல், ‘நக்குண்டார் நாவிழந்தார்’ எனும் நிலையாக கூட்டமைப்பினர் உள்ளனர். இதிலிருந்து எமது சமகால பிரச்சினைகளுக்கெல்லாம் யார் மூலகாரணம்? என்பதை எம்மால் மிகத்தெளிவாக கண்டறிய முடிகின்றது.
எனவே தான் கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உண்மைநிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகங்களை மாவட்டந்தோறும் சமநேரத்தில் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
இந்தப்போராட்டம் நடத்தப்படும் காலம், நேரம் இடம் தொடர்பான விவரங்கள் ஊடகவியலாளர்களுக்கும், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும் கூடிய விரைவில் அறியத்தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு:
திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை
தலைவி,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கம்,
வவுனியா மாவட்டம்.
0094 77 330 1724