கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் இக் கல்வீச்சுதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
யாழ்.கொழும்புத்துறையில் இருந்து பாசையூர் வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்த வேளை, பாசையூர் பகுதியில் மூன்று பேர் குறித்த பேருந்தை நிறுத்தியுள்ளனர். அந்த பகுதியில் இருந்து சிறிது தூரம் சென்று பேருந்தினை நிறுத்தியபோது, அந்த இடத்தில் இரு முதியவர்கள் பேரூந்தில் இருந்து இறங்கிய நேரத்தில், குறித்த மூவரும் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளனர்.
இதில் குறித்த பேருந்தின் கண்ணாடி உடைந்து , அதில் பயணித்த இரு பயணிகள் மீது கற்கள் பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.