தங்கள் சொந்த பெற்றோர்களை கொல்ல குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மூளைசலவை செய்கிறது என்ற தகவல் ஐஎஸ் அமைப்பில் இருந்து தப்பி வந்த ஒரு சிறுவன் மூலம் வெளியாகியுள்ளது. சிரியாவை முழுவதுமாக கைப்பற்றி தங்கள் ஆட்சியை நிலைநாட்டும் நோக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவ்வப்போது குழந்தைகள், பெண்களை பிணைக் கைதிகளாக கடத்திச் செல்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அறிவிக்கபடாத தலைநகரமான ராக்காவில் தற்கொலை படை பயிற்சி அளிக்கப்பட்ட 60 சிறுவர்களில் ஒருவனான 12 வயது நசீர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்து அண்மையில் தப்பி வந்து அகதிகள் முகாமில் இருந்த தன் குடுமபத்தோடு இணைந்தான். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் தான் இருந்த நாட்கள் குறித்து நினைவு கூர்ந்த நசீர் கூறியதாவது, “விமான படை தாக்குதல்கள் நடக்கும் போது எனக்கு மிகவும் அச்சமாக இருக்கும். ஐஎஸ் அமைப்பினர் எங்களை போன்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிறுவர்களிடம் அமெரிக்கா எங்களை கொல்ல முயற்சிக்கிறது என்று கூறுவர். எங்கள் பெற்றோரை விட, எங்களை அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் கூறுவார்கள். மேலும், எங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில், ஐஎஸ் அமைப்பு வலியுறுத்தும் இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றி நம்பிக்கையற்ற எங்கள் பெற்றோரை, நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். எங்களின் முதல் பணி எங்கள் பெற்றோரை கொலை செய்வதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள்” என்று தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் நசீர் தெரிவித்தான். முன்னதாக ஐஎஸ் இயக்கத்திலிருந்து வெளியேற வலியுறுத்தி வந்த தாயை அவரது மகனே பொதுமக்கள் மத்தியில் கொன்ற சம்பவம் சிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.