“ஈழம் லிட்டில் யப்னா” திரைப்படப் புறக்கணிப்பிற்கான ஊடக அறிக்கை!

0
27

உன்னதமான தியாகங்களைச் செய்து உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஈழத்தைப் பூர்வீகமாகவும். பிரஞ்சுப் பிரசையாகவும் உள்ள இயக்குனர் லோறன்சு என்பவரால் எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான “ஈழம் -Little Jaffna” முன்னோட்டக் காட்சியாக ஏப்பிரல் 27. 30 ஆம் நாட்களில் திரையிடப்படவுள்ளது. இதனைக் கண்டித்து பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் முழு வடிவம் வருமாறு:-

புலம்பெயர் மண்ணில் ஈழத்தமிழர் நாம் எமது அடையாளத்தோடு பல சாதனைகளை நிலைநிறுத்தி வருகின்றோம். எமது விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சி புலம்பெயர்ந்து வாழும் மண்ணின் அரசியல் பொருளாதார சமூகமாற்றங்களிலும் கணிசமான பங்கைவகிக்க ஆரம்பித்துள்ளது. அனைத்துலகம் தங்கள் புவியியல் நலன் சார்ந்து எமது விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்த போதும். எமது போராட்டம் விடுதலைக்கானது என்பதை சிறுகச் சிறுக நிரூபித்துக் கொண்டு வருகின்றோம். இங்குள்ள அரசியலிலும் அங்கம் வகிக்கும் வகையில் எமது தமிழினம் வளர்ந்துள்ளது.

இந்நிலையில் ஈழத்தைப் பூர்வீகமாகவும். பிரஞ்சுப் பிரசையாகவும் உள்ள இயக்குனர் லோறன்சு என்பவரால் எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான “ஈழம் -Little Jaffna” முன்னோட்டக் காட்சியாக ஏப்பிரல் 27. 30 ஆம் நாட்களில் திரையிடப்படவுள்ளது. உன்னதமான தியாகங்களைச் செய்து உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தி “விடுதலைப்புலிகள்” குழுக்களாக தெருச் சண்டை செய்பவர்களாக சித்தரித்து இளம்தலைமுறையினரின் சிந்தனையைச் சிதறிப்பதோடு திரிபுபடுத்தி வரலாற்றைப் பதிவு செய்வதாக அமைந்துள்ளது.

இன்று எதிரியானவன் எமது தேசிய உணர்வை விசம்கலந்த, உண்மைக்கு மாறான புரட்டுக் கதைகள் ஊடாக எமது தேசியப்பற்றை சிதைத்துவருகிறான். இதன் வெளிப்பாடாக தேசியத்தோடு கலந்து திரிபுபட்ட சிந்தனைகளை எம்மிடையே பரப்புவதிலும். அதன்பால் எம்மைத் தொழிற்படவைப்பதிலும். எம்மைக் குழப்புவதிலும் கணிசமாக வெற்றியும் கண்டு வருகிறான். இதன் ஒரு வடிவமாக இத்திரைப்படம் எம்மால் “லிட்டில் யப்னா” எனப் பெருமையாக பேசப்படும் “லாச்சப்பல்” பகுதியை முன்னிறுத்தி எம்மவர்களை வலையில் விழுத்தி இத்திரைப்படத்தின் ஊடாக எம்மையே கொச்சைப்படுத்தி உள்ளார்கள்.

அத்தோடு ஈழத்திற்கான திரைத்துறையை வளர்ப்பதில் ஆர்வமான பல ஈழத்து இளம் கலைஞர்கள் இத்திரைப்படத்தின் பின்னணியை அறியாது. இப்பொறியில் சிக்கித் தமது கலைப் பயணத்தில் தவறான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது. எனவே இத்திரைப்படம் நாளைய தலைமுறையினரிடம் தவறான வரலாற்றுப் பதிவை ஏற்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று பல சமூக. அரசியல் கட்டமைப்புகளால் நடாத்தப்பட்ட ஆழமான கலந்துரையாடலின் வெளிப்பாடாக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன். பிரான்சு வாழ் தமிழ் மக்களையும். தமிழர் சார் கட்டமைப்புகளையும். தமிழ்ச் சங்கங்களையும் இத்திரைப்படத்தை முற்றாகப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்தோடு இத்திரைப்படத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்து அதற்கான முயற்சிகள் நடைபெறுவதையும் அறியத்தருகின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here