தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக காஷ்மீர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதற்கிடையே, காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன்படி, காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் தனது கணவர் இஸ்லாமியர் அல்லாதவர் என்ற காரணத்திற்காக தீவிரவாதி சுட்டுக் கொன்றதாக பெண் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், தனது கணவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த தீவிரவாதி, துப்பாக்கி முனையில் தனது கணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும் கூறினார்.மேலும் “நீ இஸ்லாமியர் இல்லை” எனக் கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த தம்பதி திருமணம் முடிந்து தேனிலவு சுற்றுப்பயணத்துக்காக காஷ்மீர் வந்துள்ளனர். வந்த இடத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே, தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கட்டியணைத்து உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கணக்கச் செய்தது.இந்தத் தாக்குதலில் இந்துக்களை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முஸ்லிம் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக்கை சேர்ந்த சையத் ஹுசைன் ஷா என்பவர் உயிரிழந்துள்ளார்.