
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான பொண்டி மாநகரத்தின் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 19.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

காலை 10.30 மணிக்கு பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திரு. வல்லிபுரம் பார்த்தீபன் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து பொண்டி மாநகர முதல்வர் Herve அவர்கள் பிரெஞ்சு நாட்டு தேசியக்கொடியினை ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலக்குமாரன் அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர்களுக்கான பொதுப்படத்திற்கும் தியாகி அன்னை பூபதி அவர்களின் திருஉருவப்படத்திற்கும் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவர்களின் முழவு வாத்திய இசையுடன், தமிழீழ தேசக்கொடியைத் தாங்கி அணிவகுத்து வந்தனர். இவர்களின் அணிவகுப்பினை மாநகர முதல்வர், மற்றும் பிரமுகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மாணவர்கள் மைதானத்தில் தமது இல்லக் கொடிகளுக்கு முன்னால் அணிவகுத்தனர். தமிழ்ச்சங்கக் கொடியினை பிராங்கோ பொண்டி தமிழ்ச்சங்கத் தலைவர் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து இல்லத்தலைவர்கள் இல்லக் கொடிகளை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. ஒலிம்பிக் தீபத்தை கடந்த காலத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கையில் ஏந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுநர் போட்டியின் முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்கள் தொடக்கிவைக்க மைதானத்தை மக்களின் கரவொலியோடு சுற்றிவந்து ஒலிம்பிக் சுடர் பீடத்தில் சங்கமித்து வீரர்களுக்கான சத்தியப்பிரமாணமும், நடுவர்களுக்குமான பிரமாணமும் நடைபெற்றது.
பாரதி, வள்ளுவர், ஒளவையார் இல்ல மாணவ, மாணவிகள் பாலர் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த உற்சாகமாக விளையாட்டுக்களில் பங்கு பற்றியிருந்தனர். வெற்றிபெற்ற வீரர்களுக்கு மாநகர முதல்வர் மற்றும் முக்கியஸ்தர்கள், உப கட்டமைப்புப் பொறுப்பாளர்கள், கடமையில் ஈடுபட்ட நடுவர்கள், தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.

























