
மட்டு.சந்திவெளியில் விபத்து : திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் பலி
நேற்று (18) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது.
இவ்விபத்தின் போது உந்துருளியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சந்திவெளியைச்சேர்ந்த வடிவேல் மோகனசாந்தன் (வயது 27) எனும் இளைஞனாவார். கடந்த 9 தினங்களுக்கு முன் தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் முன்னெடுக்கின்றனர்.
சமூக சேவை சார்ந்த செயற்பாடுகளில் சிறு வயது முதல் ஈடுபாடுள்ள இவ்விளைஞன் சந்திவெளியில் இடம்பெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக வெதுப்பகமொன்றில் உணவினைக் கொள்வனவுசெய்ய வந்தபோதே விபத்தில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.