வேலணை மக்களிடம் வசமாக சிக்கிய கால்நடை திருட்டுக் கும்பல்: இருவர் கைது!

0
11

நீண்ட காலமாக தீவக பகுதியில் திட்டமிட்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர் குழுவொன்று வேலணையில் மக்களது முயற்சியால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியில் நேற்று (16.04.2025) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில் தெரியவருகையில் –

வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகள் ஒருதொகுதி, வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியிலுள்ள குறித்த திருட்டுக் கும்பலின் சந்தேக நபராக கருதப்படும் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த ஆடுகளை வெளியூரைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன் நேற்று இரவு மகேந்திரா வாகனம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லும் முயற்சியில் குறித்த குழு இறங்கியுள்ளது.

இதன்படி குறித்த திருட்டுக் குழு நேற்று இரவு 8 மணியளவில் 6 ஆடுகளை குறித்த வாகனத்தில் ஏற்றும் சந்தர்ப்பத்தில் அதை சிலர் கண்டு சந்தேகித்து சம்பவம் தொடர்பில் ஊரிலுள்ள முகியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் அந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற ஆடுகளைப் பறிகொடுத்த உரிமையாளர்கள் குறித்த இடத்துக்கு வந்திருந்த நிலையில் அங்கிருந்த மக்களது ஒத்துழைப்புடன் களவாக பிடிக்கப்பட்டு கடத்திச் செல்ல வாகனத்தில் ஏற்றப்பட்ட 6 ஆடுகள், மகேந்திரா வாகனம், மற்றும் இரண்டு சந்தேக நபர்களையும் பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தீவக பகுதியில் கட்டாக்காலி கால்நடைகள், வளர்ப்பு கால்நடைகள் என நாளாந்தம் பல கால்நடைகள் களவாடப்படுவதும் இறைச்சிக்காக கொல்லப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் துறைசார் தரப்பினருக்கு முறையிட்டும் கூட அத்திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாது திருட்டு சம்பவங்கள் பெரும் கொதி நிலையில் இருந்துவருகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் வேலணை பொதுமக்களாகிய தாம் ஒன்றிணைந்து குறித்த திட்டமிட்டு திருடும் திருட்டு குழுவை சேர்ந்த இருவரை கையும் களவுமாக பிடித்துள்ளமையானது மக்கள் மத்தியில் குறித்த திருட்டு சம்பவங்களுக்குத் தீர்வை எட்டமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளாதாகத் தெரிவித்தனர்.

இதனிடையே குறித்த இரு சந்தேக நபர்களுடன் 6 ஆடுகள் மற்றும் மகேந்திரா வாகனமும் ஊர்காவற்றுறை காவல்துறை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், சந்தேக நபர்களுடன் சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here