
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 95 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள ஆர்ஜெந்தே நகர பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 14.00 மணிக்கு L Atrium 95100 Argenteuil மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக தமிழர்களின் கலாசார இன்னியம் அணியுடன் நிகழ்வின் விருந்தினர்கள் மண்டபத்திற்கு பறைஇசையுடன் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களுக்கும், மாவீரர்கள் பொதுப்படத்திற்கும், நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி அவர்களுக்குமான ஈகைச்சுடர் மாவீரர் குடும்பத்தினரால் ஏற்றிவைக்கப்பட்டு மலர் வணக்கம் செய்யப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டது. மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மாநகர முதல்வர் M.Georges MOTHRON மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம், தமிழர் கட்டமைப்புப் பிரதிநிதிகள் ஏற்றி வைத்தனர். மாணவர்களின் தமிழ்ச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது.

வரவேற்புரை, வரவேற்பு நடனம், கவிதை, தனிநடனம், தனிநடிப்பு, திருக்குறள், விடுதலைப்பாடல் நடனம், நாடகம், இசைவும் அசைவும், பட்டிமன்றம், குறத்தி நடனம், சிறப்புரைகள், மலர்வெளியீடு, ஆசிரியர்கள் மதிப்பளித்தல், சிறந்த மாணவர்கள் மதிப்பளிப்பும் முக்கியமாக அண்மையில் பிரான்சு தேசத்தில் குழந்தைகளின் மனநிலை மனவுழைச்சலினை கண்டுபிடித்துக்காட்டும் கைவளையலை (Coeur leger) கண்டுபிடித்த செல்வன் சுஜீவன் முருகானந்தம் அவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டார். இவர் ஆர்ஜெந்தே தமிழ்ச்சோலையின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசவிடுதலை நெஞ்சில் சுமந்து தமது அன்றாட வாழ்வில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டனர். பிரான்சில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூதாளர் இல்லம் மாவீரர் பரிதியின் பெயரில் பரிதி அன்புச்சோலை இல்லம் என்று பெயர் மாற்றப் பட்டதையும் அதன் பயன்பாடுபற்றியும், காலத்தின் தேவைகருதி உருவாக்கம் செய்யப்பட்டதையும் அதில் மூதாளர்களை இணைத்து அவர்களின் இறுதிக்காலத்தில் அவர்கள் விரும்புவதைச் செய்து கொடுக்கும் ஒரு செயற்பாடாக விளக்கம் தரப்பட்டது. சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டார் திரு. பாலசுந்தரம் அவர்கள் ஆற்றியிருந்தார். ஆர்ஜொந்தே தமிழ்ச்சங்கத்தின் தேசப்பணிகள், மக்களின் பங்களிப்புகள் பற்றியும் காலத்தின் இன்றைய தேவையான விடயங்களை செய்ய வேண்டும் அதில் மே 18 முக்கியத்துவத்தைப்பற்றியும் தெரியப்படுத்தியிருந்தார்.

மாணவர்களின் ஆக்கங்கள் நிறைந்த வெள்ளிமலர் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர்; திரு து.மேத்தா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் வெளியிட்டு வைத்தனர். கட்டமைப்பின் பொறுப்பாளர்கள், வர்த்தக பெருந்தகைகள், தேசநலன்விரும்பிகள் வந்து பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வுகள் பாட்டி சுட்ட வடை, மீட்போம் தமிழிழீழத்தை, தமிழ் ஆகினாய், சாகாவரம் பெற்ற சங்கிலியன், மொழியே தெய்வம் என்று தோன்றி தமிழ் இனமே, பாட்டுக்கொரு தலைவன் பாரதி, நான்யார்? , விலங்ககம், மறப்போமா மாவீரர்களை, தமிழும் அறிவியலும், இயற்கையைக்காப்போம், கல்வியின் சிறப்பு, தமிழ்ப்பெண்களின் வீரம்,வேர்களைத்தேடும் விழுதுகள், மாமா தலைவர் மாமா, புலம்பெயர் நாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த வழிகாட்டிகளா? இல்லையா? போன்ற தலைப்புகளில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியத்தின் சார்பாக அதன் முக்கிய செயற்பாட்டாளர் சிறப்பான உரையைத் தந்திருந்தார். சிறந்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றிருந்தது.























(ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு)