பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற செல் நகர பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா!

0
79

பிரான்;சின் புறநகர் பகுதியில் ஒன்றான 77 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள செல் நகர பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு Centre Culturel de chelles SALLE TRISTAN ISEULT மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மங்கல விளக்கினை மாநகர முதல்வர் மதிப்புக்குரிய. M. Brice RABASTE அவர்களும், துணை முதல்வர் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. து. மேத்தா அவர்களும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் அவர்களும், தமிழச்சோலைத் தலைமைப்பணியகம் சார்பாக செயலாளர் திரு. காணிக்கைநாதன் அவர்களும், தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. சுரேஸ் அவர்களும், தமிழ்ச்சோலை நிர்வாகி திரு. கு. நிமலகுமாரன் மற்றும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஏற்றி வைத்தனர்.

அகவணக்கம் செய்யப்பட்டது தமிழ்ச்சோலை மாணவர்களால் தமிழச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்புரையும், வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. கோலாட்டம், ஊடகங்களால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய கருத்தரங்கம், நிர்வாகியின் சிறப்புரையைத் தொடர்ந்து மாநகரமுதல்வர் தனது உரையை ஆற்றியிருந்தார் தமிழ்மக்களின் தாய்மண் பற்று, மொழிப்பற்று என்பவற்றை தாங்கள் நன்கு அறிவார்கள் என்றும் அதனை அழியவிடாது பாதுகாப்பதோடு அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச்செல்வதையும், அதற்கு தமது மாநகரத்தில் தாமும் உதவியடைவதையிட்டு பெருமையடைவதாக சொல்லியிருந்தார். அவர்கள் தமிழ்ச்சங்கத்தினரால் மலர் கொத்து வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து விலங்ககம் என்னும் தலைப்பில் காட்சிநடனம், எழுச்சி நடனம், நாடகம் பண்டாரவன்னியன், ஈழவழநாடு கும்மி நடனம், ஆங்கிலப்பாடல், வில்லுப்பாட்டு, தாளலயம், கவியரங்கம், தமிழ்ப்புலவர்கள் பற்றிய நாடகம், நிகழ்வின் சிறப்பாக காத்தவராயன் கூத்து நிகழ்வானது வந்திருந்த குழந்தைகள் முதல் அனைவரையும் சத்தம் செய்யாது கட்டிப்போட்டு வைத்திருந்தது.

சிறப்புரையை பரப்புரைப் பொறுப்பாளர் வழங்கியிருந்தார்.

இந்த 27 வருடகால சங்கத்தின் பயணமும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் காட்டிய பங்களிப்பும், தேசம் எதிர்பார்த்து 30 வருடங்களுக்கு முன் தூரநோக்கு சிந்தனையுடன் உருவாகிய இந்த சங்கங்கள் தமது அளப்பரிய பணியை அர்ப்பணிப்போடு செய்து வருவதையும், இதில் கல்விகற்ற மாணவர்கள் பிரான்சு மண்ணில் சகலதுறைகளிலும் வரலாற்றைப்பதித்து வருகின்றார்கள் என்றும் இத்தனை வருடகாலம் தமது குடும்பத்துக்காகவும், பிள்ளைகளுக்காகவும் சொத்துகள் சேர்த்து ஒரு நல்லநிலைக்கு வந்துள்ள பெற்றோர்கள் இனி தமது பிள்ளைகளுக்குத் தாயகத்தில் இருந்த போர் பட்ட வேதனைகள், துன்பங்கள், வலிகள் பற்றியும், தாய் மண்ணைவிட்டு ஏன் இந்த புலம்பெயர் தேசத்துக்கு வந்தோம். வந்தும் பட்ட துன்பங்களை ஆறஅமர்ந்து சொல்ல வேண்டும். அப்போது தான் எங்களுடைய அடுத்த தலைமுறை இனத்தின் வரலாற்றை சுமந்த நேர்வழியில் இந்த நாடு போற்றும் நல்ல தலைமுறையாக வளருவார்கள் என்றும் கூறியிருந்தார்.

அதே நேரத்தில் தன்னெழுச்சியாக செல் தமிழ்ச்சோலை 12 ஆம் வகுப்பு மாணவியொருவர் மேடையில் வந்திருந்த மக்களிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்டிருந்தார். இங்கிருக்கும் பெரியவர்களிடம் அவர்களின் தாயகக் கதைகளையும், புலம்பெயர்ந்த வாழ்வின் கதையையும் தன்னைப்போல பல இளைய பிள்ளைகள் அறியவிரும்புவதாகவும் அதனை செய்து தரும் படி வந்திருந்த பெற்றோர்கள், பெரியவர்களிடம் கேட்டிருந்தார். பலர் தமது சம்மதத்தை கொடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வளர்தமிழ் 10,11,12 மாணவர்கள் காத்தவராயன் கூத்து ஒன்றினை மிகவும் சிறப்பாகச்செய்திருந்தனர். மாணவர்களே கூத்தினை நேரடியாக பாடி ஆடி செய்திருந்தமை மிகுந்த சிறப்பைத் தந்திருந்தது. முடிவில் மக்களிடமிருந்து மிகுந்த பாராட்டுதல்களாக கரகோசங்களை பெற்றிருந்தனர்.

தமிழ்மொழித்தேர்வில் 03 தடவைகள் அதிதிறன் பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். பரதநாட்டிய மாணவர்களின் வர்ணம் நடனத்துடன் தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் பிராங்கோ தமிழ்ச்சங்க, தமிழ்ச்சோலை மாணவர்களின் 27 ஆவது ஆண்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here