நாடு கடத்தப்படுவீர்கள் – வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப் அரசு!

0
65

அமெரிக்காவில் ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக எலான் மஸ்க் தலைமையில் புதிய துறையை உருவாக்கினார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சமீபத்தில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய தவறினால், அது குற்றம்.

அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கைது, அபராதம், சிறை தண்டனை அல்லது நாடு கடத்தப்படுதல் ஆகிய தண்டனைகளை சந்திக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அவர்கள் ஒருபோதும் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாது என்றும் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.

இந்த புதிய ஒழுங்கு விதிகளின்படி, விசா வைத்திருப்போர், கிரீன் கார்டு பெற்றவர்கள் மற்றும் வேலை செய்ய அனுமதி பெற்ற தனிநபர்கள் என அவர்கள் முன்பே பதிவு செய்யப்பட்டவர்கள் என பரிசீலிக்கப்பட்டவர்கள் ஆயினும், அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்து நிரூபிக்கப்படும் வகையில் எல்லா நேரங்களிலும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என புதிய விதி தெரிவிக்கின்றது.

இதேபோன்று 14 வயது நிறைவடையும் குழந்தைகளும் கட்டாயம் மறுபதிவு செய்து கொண்டு, கைவிரல் ரேகைகளை அவர்களுடைய பிறந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில்லா வெளிநாட்டினர், ஏப்ரல் 11-ந்தேதிக்கு பின்னர் 30 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்வதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், புலம்பெயர்வோருக்கான உரிமைகள் குழு உள்ளிட்டவற்றை சேர்ந்த விமர்சகர்கள், இந்த புதிய பதிவு விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், லட்சக்கணக்கானோர் பாதிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here