விண்வெளி அனுபவம் பற்றி சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பேட்டி!

0
13

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

கடந்த மார்ச் 18 ஆம் திகதி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தனர்.

இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்த அனுபவம் பற்றி சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர்.

அதில் விண்வெளியில் இருந்து இந்தியா பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த சுனிதா, “விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.

கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியாவுக்கு அடுத்து பயணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எனது தந்தையின் சொந்த நாட்டுக்குத் சென்று மக்களை சந்தித்து உற்சாகமடைவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் ஆக்ஸியம் திட்டத்தில் இந்தியரான சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்ல இருப்பது மிகவும் அருமையான விஷயம். அவர் ஹீரோவாக திகழ்வார்.

அவரும்  உங்களுக்கு அங்கிருந்து இந்தியா எப்படி உள்ளது என்பதை கூறுவார். இந்தியர்களுடன் எனது அனுபவங்களைப் பகிர ஆர்வமுடன் இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும். விண்வெளியில் கால்பதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான் உதவுவேன் என்று தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here