
கடந்த வாரம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஓவல் அலுவலகத்தில் நடந்த சூடான வாக்குவாதத்திற்குப் பிறகு, உக்ரைனுக்கு அமெரிக்க இராணுவ உதவிகளை அனுப்புவதை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சின்.என்.என் இடம் தெரிவித்தார்.
டிரம்ப் வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்திய பின்னர் ஏற்பட்ட உதவி நிறுத்தம், உக்ரைனின் போர்த் திறன்களில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஜெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார் என்பதை டிரம்ப் தீர்மானிக்கும் வரை இது அமுலில் இருக்கும் என்று ஒரு அதிகாரி கூறினார். இது அடிப்படையில் போர்க்களத்தில் மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் என்று அச்சுறுத்துவதன் மூலம் உக்ரைனை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜனாதிபதி அமைதியில் கவனம் செலுத்துகிறார் என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்த இலக்கை அடைய எங்கள் கூட்டாளிகளும் (மேற்கு நாடுகள்) உறுதியுடன் இருக்க வேண்டும். தீர்வுக்கு அது பங்களிக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக எங்கள் உதவியை நாங்கள் இடைநிறுத்தி மதிப்பாய்வு செய்கிறோம் என்று வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.
வாஷிங்டனுக்கும் கீவிற்கும் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக வெளிப்படையான விரோதப் போக்கிற்குப் பின்னர், நேற்று திங்கட்கிழமை ஆயுத உதவிகளை வழங்கும் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் பதவியேற்றதிலிருந்து உறவு எவ்வளவு தூரம் மோசமடைந்துள்ளது என்பதற்கான மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறியாகும்.
இந்த இடைநிறுத்தம் உக்ரைனுக்குள் இன்னும் இல்லாத அனைத்து இராணுவ உபகரணங்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த வாரம் ஜெலென்ஸ்கியின் மோசமான நடத்தை என்று டிரம்ப் கருதியதற்கு நேரடி எதிர்வினை இதுவாகும்.
அமெரிக்காவின் போர் நிறுத்தம் ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தத் தொடங்கும் வரை, உக்ரைன் அதன் தற்போதைய சண்டை வேகத்தை பல வாரங்களுக்கு ஒருவேளை கோடையின் ஆரம்பம் வரை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்று மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைடன் நிர்வாகம் அதன் இறுதி நாட்களில் உக்ரைனுக்கு ஆயுதங்களை விரைவாக அனுப்பியது இது நாட்டிற்கு மேம்பட்ட ஆயுதங்களின் பெரிய இருப்புக்களை வழங்கியது.
நீண்ட தூர ATACMS ஏவுகணைகள் உட்பட, அந்த அதிநவீன ஆயுதங்கள்தான் உக்ரைனை ரஷ்ய எல்லைக்குள் ஆழமாகத் தாக்க அனுமதித்தன. அந்த ஆயுதங்கள் இடைநிறுத்தப்பட்டால் பாதிக்கப்படக்கூடிய ஒரு உத்தி.
உக்ரைனின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறையால் கூடுதலாக, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க பீரங்கி ஏற்றுமதிகளை மாற்ற முடியும் என்றாலும், கியேவ் பயன்படுத்தும் மிகவும் மேம்பட்ட ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளின் உதவி கியேவ் இப்போதைக்கு போராட்டத்தில் நிலைத்திருக்க உதவுவதால், உதவி நிறுத்தத்தின் தாக்கங்களை இரண்டு முதல் நான்கு மாதங்களுக்குள் உக்ரைன் உணரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து உறவுகளில் ஏற்பட்ட முறிவு குறித்து ஜெலென்ஸ்கியிடம் அதிகாரிகள் ஒப்புதல் கோரியுள்ளதால், உக்ரைனுக்கான இராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்த வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ளது.
CNN இல் நடந்த ஒரு நேர்காணலில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ஜெலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
இந்த நிறுத்தம், ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் ஜெலென்ஸ்கிக்கு தங்கள் ஆதரவைத் தெளிவுபடுத்திய பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற அமெரிக்காவின் பாரம்பரிய ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் டிரம்பை இன்னும் தெளிவாக முரண்பட வைக்கிறது.
ஐரோப்பாவால் தனியாக நிரப்ப முடியாத ஒரு திறன் இடைவெளி உள்ளது என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார்.
உக்ரைனுக்கு இராணுவ உதவியை நிறுத்துவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை அற்பமானது மற்றும் தவறானது என்று ஒரு ஐரோப்பிய அதிகாரி கூறினார்.
உக்ரைன் மக்களிடையே அமெரிக்க அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையை இது உடனடியாக ஆழப்படுத்தும் என்று அந்த அதிகாரி கூறினார். வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தீர்ந்துவிட்ட பிறகு, ரஷ்ய வான் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைன் தற்காத்துக் கொள்ள முடியாததால், இது தேவையற்ற பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றும் அந்த அதிகாரி கணித்துள்ளார்.