
பிரான்சின் கிழக்குப் பகுதி நகரமாகிய முலூஸில்(Mulhouse) இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற பயகத்திவெட்டுத் தாக்குதல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர். தாக்குதலாளி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
நகரில் உள்ள மூடிய சந்தைப் பகுதி ஒன்றில் தாக்குதல் நடந்திருக்கிறது. அல்ஜீரியப் பிரஜை எனக் கூறப்படும் 37 வயதான இப்ராஹீம் என்பவரே கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் அப்பகுதியில் வைத்துப் பாதசாரியான 69 வயதான போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கத்தியால் கண்டபடி வெட்டிய பிறகு “அல்லாஹூ அக்பர்” எனக் கோஷமிட்டுள்ளார்.
பொலீஸார் தலையிட்டு அவரை மடக்கிப் பிடித்தனர். தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழந்தார். பொலீஸார் மூவருக்கு காயங்கள் ஏற்பட்டன.
பொலீஸ் வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இப்ராஹீம், கடந்த ஆண்டு தடுப்பு நிலையம் ஒன்றில் இருந்து விடுதலையான பிறகு நீதிமன்றக் கண்காணிப்புடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதேசமயம் கட்டாயமாக நாட்டின் எல்லைக்கு அப்பால் விடப்படவேண்டியவர்
என்ற உத்தரவும் அவர் மீது விடுக்கப்பட்டிருந்தது எனக் கூறப்படுகிறது.
தேசிய பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப்பிரிவு இந்தத் தாக்குதலை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கின்ற அதிபர் மக்ரோன், “இது ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பாரிஸில் இன்று ஆரம்பமாகிய சர்வதேச விவசாயக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கின்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அவர், அங்கிருந்தவாறு வெளியிட்ட பதிவிலேயே இதனைத் தெரிவித்திருந்தார். தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து எலிஸே மாளிகைக்குத் திரும்பினார் எனத் தெரியவருகிறது.