அவுஸ்திரேலியாவில் உலக புகழ்பெற்ற ஒபேரா அரங்கு அமைந்துள்ள பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானதையடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒபேரா அரங்கம், அதையொட்டிய மேன்லி சொகுசுப் படகுத்துறை ஆகியவை அவுஸ்திரேலியா நாட்டின் முக்கியச் சுற்றுலா இடங்களாகும்.
இந்நிலையில், நேற்று சொகுசுப் படகில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு பொலிஸார் அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களை வெளியேற்றினர்.
அந்தத் தகவல் வெளியானதும், அந்தப் பகுதியிலிருந்து உடனடியாகப் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பொலிஸாரும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், மர்மப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
சமூக வலைத்தளம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மை என நியூ சௌத் வேல்ஸ் மாகாண காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.