
மூத்த ஊடகவியலாளர் பிபிசி ஆனந்தி சூர்யப்பிரகாசம் லண்டனில் நேற்று(21) வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் சாவடைந்துள்ளார்.
யாழ். குடாவின் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் வானொலியில், தயாரிப்பாளராக பணிபுரிந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்த அவர் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.

அதன்பின்னர் 1970களில் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த அவர் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராக மூத்த தயாரிப்பாளராகவும் பணியாற்றி 2005இல் ஓய்வு பெற்றார்.

அதன்பின்னர் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்ட நிலையில் தனது மறைவுவரை அதன் தலைமை பொறுப்பில் இருந்தார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பி. பி. சி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பணிபுரிந்த ஆனந்தி சூர்யப்பிரகாசம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இரண்டு முறை செவ்விகண்ட பெருமைக்குரியவர்.

இவர் தயாரித்த பல ஒலிபரப்புத் தொடர்களும் முக்கிய பிரபலங்களுடனான செவ்விகளும் இவரை உலகப்பரப்பெங்கும் வாழ்ந்த தமிழ்மக்களிடையே பிரபலமாக்கியிருந்தன.
இந்நிலையில், ஆனந்தி சூர்யபிரகாசத்தின் மறைவை அடுத்து பலரும் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.