
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லையென சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுத்த போராட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று எட்டாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தீச்சட்டி ஏந்திய பேரணி நடைபெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தீச்சட்டி ஏந்திய பேரணி டிப்போ சந்தி வரை சென்றது. போராட்டத்தில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
2017 பெப்பரவரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டு வருடங்களாக அதாவது இன்றுடன் 2920 நாட்களாக கடந்து தொடர்கின்றது. 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன.
இன்றும் இனப்படுகொலை தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால், இலங்கையில் ஜனாதிபதிகளும் ஆட்சியாளர்களும் மாறினாலும் தொடர்ந்தும் இனப் படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, நேரடியாக படையினர்களிடம் சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான நீதி இதுவரை கிடைக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தி மூலம் தற்போதய புதிய ஜனாதிபதியாக கடந்த 2024 செப்டெம்பர் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க 2024 நவம்பர் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு நல்லெண்ணமும் அவர்களின் செயலில் தென்படவில்லை. மாறாக புலனாய்வாளர்களை ஏவி விட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரைக் கண்காணிப்பதுடன் அவர்களைச் சுதந்திரமாக தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு நடத்தும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொள்ள விடாமல் நீதிமன்ற தடை உத்தரவுகளைக் கொடுத்து ஜனநாயக வழிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி தடுக்கும் அடாவடிச் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய பெற்றோர்கள் இதுவரை 300 இற்கும் மேற்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையறியாது வேதனையுடன் உயிர் இழந்த பரிதாபங்கள் வடக்கு, கிழக்கில் நடந்துள்ளன.
எங்கள் வேதனைகளையும் வலிகளையும் உண்மைகளையும் இலங்கை அரசு புரியவில்லை. அதேபோல் சர்வதேசமும் புரியவில்லை என்பதையே கடந்த எட்டு வருங்களாக நாங்கள் கண்ட உண்மையென குடும்பங்கள் தெரிவித்துள்ளன.