உலக செழிப்பின் காரண கர்த்தாவான சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையான தைத்திருநாளை இன்றையதினம் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
அதற்கமைய பிறந்துள்ள வருடம் முழுவதும் தங்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகளோடு தை மாதத்தின் முதல் நாளை மக்கள் இன்முகத்துடன் வரவேற்கின்றார்கள்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற திருக்குறளின் மூலமாக உழவின் மகத்துவத்தை திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.
உழவர்களின் தனித்துவத்தை உலகுக்கு உணர்த்துகின்ற உன்னதமான தைப்பொங்கல் திருநாள் இன்றாகும்.
இது இந்துக்களால்தொன்று தொட்டு சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் திருநாளாகும்.
உலகிற்கு ஒளிமுதலாக இருந்து நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத்தின் சக்தியை பிரபஞ்சத்திற்கு வாரி இறைக்கின்ற சூரியபகவானின் அர்ப்பணிப்பை உழவர்கள் நன்றியுணர்வுடன் இன்றைய தினம் நினைவுகூர்வார்கள்.
அதற்கமைய உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலக இந்துப்பெருமக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர்.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஏர்பிடித்து உழும் உழவர்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பொங்கல்திருநாளன்று ஆலயங்களில் பொங்கல் பொங்கி வழிபாடு செய்வது வழமையாகும்.
இல்லங்களின் முற்றத்தில் அழகு மாக்கோலமிட்டு மங்களத்தின் அடையாளசின்னமாக விளங்குகின்ற மஞ்சளையும் இஞ்சியையும் புதுப்பானையில் கட்டி பால் பொங்கிவர பட்டாசு கொளுத்தி சூரியதேவனுக்கு இன்றையநாள் மக்கள் நன்றி செலுத்துவார்கள்.
தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் உழவர்களின் உன்னததோழனாக இருந்து உழவுக்கு உறுதுணைபுரிந்த எருதுகளை வழிபடும் நாளான பட்டிப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.