யாழ். பல்கலை மாணவர்கள் சிலர் முறைகேடு: கலைப்பீட பீடாதிபதி பதவி விலகல்!

0
61

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தாம் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று திடீரென அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் சிலரின் தவறான செயற்பாடுகளைக் கண்டித்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் கலைப்பீட பீடாதிபதி பதவியில் இருந்து பேராசிரியர் சி.ரகுராம் விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ரகுராமின் இந்தப் பதவி விலகல் பல்கலைக்கழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் அவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்துக்குள் தவறான சில செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்துக்குள் தவறான செயற்பாடுகளை முன்னெடுத்த அந்த மாணவர்கள் இணைந்து தமது வகுப்குத் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

ஆனால், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராகப் பல்கலைக்கழகத்துக்குள்ளேயே பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் பின்னரே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையிலே வகுப்குத் தடை விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தின்போது தவறிழைத்த மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. பேரவையின் இத்தகைய நடவடிக்கை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக ஒரு சில மாணவர்களின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளாலும், ஒரு சிலரின் அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களாலும் பல்கலைக்கழகத்தின் ஏனைய மாணவர்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளைத் தட்டிக் கேட்கவோ அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்க முடியாத நிலைமையை பல்கலைக்கழகப் பேரவையின் செயற்பாடுகள் ஏற்படுத்தியுள்ளன.

இதனால் மாணவர்களின் தவறைத் தட்டிக் கேட்க மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பல்கலைக்கழகத்துக்குள் உரிய முடிவுகளை எடுக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது. பல்கலைக்கழகத்துக்குள் தவறிழைப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப் பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் இத்தகைய செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற காரணத்தினாலேயே கலைப்பீட பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் சி.ரகுராம் தாம் பதவி விலகுவதாகக் கடிதம் மூலம் துணைவேந்தருக்கு அறிவித்துள்ளார்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையிலே மாணவர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற பேராசிரியர் சி.ரகுராம் பதவி விலகக் கூடாது எனவும், மீண்டும் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டு பீடாதிபதியாக அவர் இருக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here