கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.01.2025) சனிக்கிழமை 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் திரான்சி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை திரான்சி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.பாபு அவர்கள் ஏற்றிவைக்க

மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து பொது மக்கள் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

அரங்க நிகழ்வுகளாக கரோக்கி இசையுடன் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள். தமிழ்ச் சோலை மாணவிகளின் விடுதலைப் பாடல்களுக்கான நடனங்களும் கேணல் கிட்டு நினைவு சுமந்த கவிதை மற்றும் பேச்சுக்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. கரோக்கி இசைப்பாடல்களை தமிழ்ச்சோலை மாணவர்களும் தமிழர் கலைபண்பாட்டுக்கழக பாடகர்களும் பாடியிருந்தனர். நடனங்களை திரான்சி தமிழ்ச்சோலை, லுபுளோமேனில் தமிழ்ச் சோலை, நுவாசிலுசெக் தமிழ்ச் சோலை மாணவிகள் நடாத்தியிருந்தனர்.

நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.




















(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு ஊடகப்பிரிவு )