தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ். மருத்துவ பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிணைந்து யாழில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி அரசால் வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் தனியார் பல்கலைக்கழகங்களுகான அனுமதி அரசால் வழங்கப்பட்டால் வைத்தியத்துறையில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் நலிவடையச் செய்யும். இதுமட்டுமல்லாமல் இதுவரை காலமும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் பயிற்சிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதேபோன்று தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துறையில் கற்பவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலையில், பயிற்சிக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருத்துவத் துறைக்குள் உள்ளீர்க்கப்படவுள்ளவர்கள் பொதுப் பரீட்சை இல்லாமல் உள்ளீர்க்கப்படவுள்ளனர். உயர்தரப்பரீட்சையில் வெறுமனே சி.எஸ் சித்தி பெற்றவர்கள் கூட தனியார் துறைக்குள் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் 3பி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். இனிவரும் காலங்களில் பணம் உள்ளவர்கள் இலகுவாக கல்வியை கற்றுச் செல்லலாம் என்ற நிலை உருவாக்கப்படப் போகின்றது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியானது அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும். வைத்திய சேவையில் மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பும் இல்லாமல் ஆக்கப்படவுள்ளது.
இதனால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என அரசுக்கு மருத்துவ பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் மருத்துவ பீட 7 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் காலை யாழ். மருத்துவ பீடத்தில் ஒன்றிணைந்து பலாலி வீதியூடாக யாழ்.போதனா வைத்தியசாலை வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.