சுமார் 60 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறு தங்கச் சங்கிலிகள், 10 தங்கத்துண்டுகளை சென்னைக்கு கடத்தமுற்பட்ட 9 பேர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.125 என்ற விமானத்தில் சென்னை நோக்கி இந்த தங்கம் கடத்தப்பட இருந்த நிலையிலேயே இவர்கள் ஒன்பதுபேரும் கைதுசெய்யப்பட்டதாகவும் அதில்எட்டுப் பேர் இந்தியர்கள் எனவும் சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், லெஸ்லி காமினி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இலங்கையரிடமிருந்து 300 கிராம் நிறைக் கொண்ட மூன்று தங்கத் துண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்தியர்கள் 8 பேரிடமும் இருந்து 6 மாலைகள் மற்றும் 7 தங்கத் துண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று அதிகாலை இந்தியாவின் சென்னை நோக்கி பயணிக்க நுவரெலியாவைச் சேர்ந்த 41 வயதுடைய புடவை வர்த்தகர் ஒருவர் வந்துள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட விமான நிலைய சுங்கப் பிரிவினர் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் போது அடிப்பாததில் ஒட்டி மறைக்கப் பட்டிருந்த மூன்று தங்கத் துண்டுகளை சுங்கப் பிரிவினர் அவரிடம் இருந்து கைப்பற்றினர். இதன் நிறை 300 கிராம் என குறிப்பிடும் சுங்கப் பிரிவினர் அதன் பெறுமதி 15 இலட்சம் ரூபா என குறிப்பிட்டனர்.
வர்த்தகரின் இடது காலின் பாதத்தில் இம்மூன்று தங்கத் துண்டுகளும் ஒட்டப்பட்டிருந்த நிலையில் சப்பாத்து போடப்பட்டிருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந் நிலையில் இந்த வர்த்தகர் பயணிக்க வந்திருந்த யூ.எல்.125 என்ற ஸ்ரீ லங்கன் விமானத்தில் ஏற்கனவே ஏறியிருந்த எட்டு இந்தியர்கள் திடீரென இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட
போது அவர்களிடமும் சட்ட விரோதமாக கடத்தப்பட தயாராக இருந்த தங்கம் மீட்கப்பட்டது.
சுங்கப் பிரிவினரின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே இந்த எட்டுப்பேரும் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 58, 20, 30, 32, 29, 40, 19 மற்றும் 39 வயதுகளை உடைய ஆண்கள் எனவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
58 வயதான நபரிடம் 59 கிராம் எடைக் கொண்ட ஒரு தங்கத் துண்டு இருந்துள்ளதுடன் அது அவரது நெஞ்சுப் பகுதியில் ஒட்டி மறைத்து வைத்து கடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20 வயதான இரண்டாவது நபரிடம் 100 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியொன்று இருந்துள்ளதுடன் அது பூரணப்படுத்தப்படாதது என தெரியவந்துள்ளது. அந்த சங்கிலி அவரது மல வாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. 30 வயதான மூன்றாவது நபரிடம் இரு தங்கத் துண்டுகள் இருந்துள்ளதுடன் அது 77 கிராம் நிறைக் கொண்டது எனவும் அவை அவரது மல வாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதனைவிட நான்காவது நபரான 32 வயதுடைய நபரின் மல வாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் நிறையுடைய தங்க சங்கிலிகளும், ஆறாவது சந்தேக நபரான 40 வயதுடைய நபரின் மலவாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி மற்றும் 60 கிராம் உடைய தங்கத் துண்டு ஆகியவற்றையும்,7 ஆவது சந்தேக நபரான 19 வயதுடைய நபரின் மலவாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பொதிகளில் இருந்த 266 கிராம் நிறையுடைய 4 தங்கத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. எட்டாவது சந்தேக நபரான 39 வயதுடைய இந்தியர் 141 கிராம் நிறையுடைய இரு தங்கச் சங்கிலிகளை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்களிடம் சுங்க அத்தியட்சர் திஸ்ஸ பிரியந்த டீ சில்வா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Home
சிறப்பு செய்திகள் சென்னைக்கு தங்கம் கடத்த முற்பட்ட 8 இந்தியர்கள் உட்பட 9 பேர் சுங்கப் பிரிவினரால் கைது!