கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் 3வது பெரிய நாடு ஈரானாகும். இந்த நிலையில், ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது.
உலக அளவில் ஈரானை தனிமைபடுத்தும் முன்னேற்பாடுகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது.
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இதை தொடர்ந்து ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பைவிடக் குறைந்துள்ளது . ஆனால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பின் விளைவாக விலையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் சீனா, இந்தியா உட்பட ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ஏற்கெனவே கூறி விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
ஏன் என்ற கேள்வி கேட்காமல் அவர்கள் நிறுத்தி வேண்டும் என்பதை அவர்களுக்கு கூறியுள்ளோம். இருதரப்பு சந்திப்பின் போது இதை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். இனிமேல் நடைபெறவுள்ள இருதரப்பு சந்திப்பின் போதும், இதனை வலியுறுத்துவோம்.
பெரும்பாலான நாடுகள் எங்களது முயற்சிக்கு ஆதரவளித்துள்ளன. எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கவும் தயங்க மாட்டோம். வரத்தக ரீதியாக அந்த நாடுகளை முடக்குவதை தவிர வேறு வழியில்லை’’ எனக் கூறினார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் விரைவில் அமெரிக்கா செல்கின்றனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சவார்த்தை நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.
அமெரிக்காவின் மிரட்டலால் பாதிக்கப்படாமல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா டாலர் பணத்தை கொடுப்பத்தில் தற்போது சிக்கல் நீடிப்பதால் பாதியளவு தொகையை ஏற்கெனவே இந்திய ரூபாயாகவே கொடுத்து வருகிறது. இதற்கு ஈரானும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் டாலர் பற்றாக்குறை பிரச்சினை சிக்கல் குறைந்துள்ளது. மொத்த தொகையையும் இந்திய ரூபாயில் கொடுக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவும் இந்தியா தயாராகி வருகிறது.