செல்போன் வெடித்ததில் ஏற்பட்ட தீயில் கருகி தம்பதிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் அவர்களின் மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர்பாடி பி.வி.காலணியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும், அவரின் மனைவி ராணி மற்றும் மகன் தினேஷ் ஆகியோர் ஜனவரி 24ஆம் தேதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ராஜேந்திரன், அதிகாலை 5 மணிக்கு விழிக்க வேண்டும் என்பதற்காக, தனது மொபைலில் அலாரம் செட் செய்துள்ளார். அதன் பின் செல்போனை, தனது படுக்கையறை அருகிலேயே சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கிவிட்டார்.
அதிகாலை 5 மணிக்கு அலாரம் அடித்துள்ளது. அப்போது அவரின் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்து கிளம்பிய தீ அவரின் படுக்கையறையிலும் பரவியது. சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அவர்கள் மூன்று பேரும் படுக்கையிலிருந்து அலறியடித்துக் கொண்டு எழுந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் கட்டிலில் தீ பரவியதால், தீ அவர்களின் உடலிலும் பரவியது. அதனால் அவர்களால் வெளியே ஓட முடியவில்லை. ராஜேந்திரன் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியே வந்துள்ளார். சத்தம் கேட்டு விழித்த அக்கம் பக்கத்தினர், மூவரையும் வெளியே கொண்டுவந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீயில் கருகிய மூவரும் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று ராஜேந்திரனும் அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களின் மகன் தினேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.